×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ5 கோடிக்கு ஆடுகள் விற்பனை: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் இன்று நடந்த ஆட்டு சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள ஆடுகள் விற்பனையானது. ஏராளமான வியாபாரிகள், இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். பக்ரீத் பண்டிகை வரும் 29ம் தேதி வருவதை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக சென்னை, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகாலை முதலே சந்தைக்கு வந்து குவிந்தனர். இதனால் வழக்கமாக சந்தை நடைபெறும் இடத்திலிருந்து மாற்றப்பட்டு உ. கீரனூர் ஏரி பகுதியில் இன்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

ஆடுகளின் விலை ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்கப்பட்டது. பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி விருந்து கொடுப்பதற்காக ஆடுகளை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி அதனை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் வளர்த்து பின்னர் விருந்து கொடுக்கும் பழக்கம் இருப்பதால் இன்று ஆடுகளை வாங்க நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தைக்கு வந்தனர். விலையை பொருட்படுத்தாமல் தேவையான ஆடுகளை வாங்கி சென்றனர். இதேபோல் ஆட்டிறைச்சிக்காகவும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். அதிகாலை முதலே ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்க மினி டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.5 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் வாகனங்களில் வந்ததால் சந்தை பரபரப்புடன் காணப்பட்டது.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ5 கோடிக்கு ஆடுகள் விற்பனை: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Goats ,Ulundurpet ,Goat ,Market ,Bakrit ,National Highway ,Bakrit festival ,Ulundurpet Goat ,Dinakaran ,
× RELATED மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி